மலச்சிக்கல் பிரச்னையால் அவதிப்படுகிறீர்களா?
காலையில் எழுந்ததும் மலம் போகாவிட்டால், பலருக்கு அந்த நாள் முழுவதும் எந்த வேலையும் ஓடாது. வெறும் வயிற்றில் லிட்டர் கணக்கில் தண்ணீர் குடிப்பார்கள். சூடாக காபி, தேநீர் அருந்துவார்கள். பீடி, சிகரெட் புகைப்பார்கள்.
மலச்சிக்கல்
வழக்கத்துக்கு மாறாக மலம் வெளியேறாமல் இருப்பது, மலம் இறுகிப்போவது, மலம் கழிப்பதில் சிக்கல், மலம் முழுவதுமாகப் போகவில்லை என்கிற உணர்வு, மலம் கொஞ்சம்கூடப் போகாமல் ஆசனவாயை அடைத்துக்கொள்வது போன்ற நிலைமைகளை ‘மலச்சிக்கல்’ என்று அழைக்கிறோம். மருத்துவ மொழியில் சொன்னால் ஒருவருக்கு வாரத்துக்கு மூன்று முறைக்குக் குறைவாக மலம் போவது ‘மலச்சிக்கல்’.
அடிப்படைக் காரணம்
நாம் சாப்பிட்ட உணவு இரைப்பை, முன் சிறுகுடல், சிறுகுடல் என்று பயணம் செய்து தன்னிடமுள்ள சத்துகளையெல்லாம் ரத்தத்துக்குக் கொடுத்துவிட்டு, சக்கை உணவாகப் பெருங்குடலுக்கு வரும். அதில் 80 சதவீதம் தண்ணீர்தான் இருக்கும். இந்தத் தண்ணீரில் பெரும்பகுதியை உறிஞ்சி எடுத்துக்கொண்டு சுமார் 250 மி.லி. அளவில் மலத்தில் வெளியேற்ற வேண்டியது பெருங்குடலின் வேலை. சமயங்களில் அது தண்ணீர் முழுவதையும் உறிஞ்சிக்கொள்ளும். இதனால் மலம் கட்டியாகி மலச்சிக்கலை ஏற்படுத்தும். இப்படித் தண்ணீர் அதிகமாக உறிஞ்சப்படுவதை ஊக்கப்படுத்தப் பல காரணிகள் இருக்கின்றன. அவற்றைத் தவிர்த்தால் மலச்சிக்கல் ஏற்படாது. அந்தக் காரணங்கள்?
- மலச்சிக்கலுக்கு முக்கியக் காரணி நம் உணவு முறை.
- கொழுப்பு மிகுந்த மேற்கத்திய உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது.
- பால் சார்ந்த உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது,
- பிட்ஸா, பர்கர், நூடுல்ஸ் போன்ற துரித உணவு வகைகளையும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளையும் அதிக அளவில் சாப்பிடுவது.
- நார்ச்சத்துள்ள உணவு வகைகளைக் குறைவாகச் சாப்பிடுவது.
- தண்ணீர் குறைவாகக் குடிப்பது.
- காய்கறி, கீரை, பழங்களைச் சாப்பிடாதது போன்ற தவறான உணவுப் பழக்கங்கள்தான் பலருக்கும் மலச்சிக்கலை உண்டாக்குகின்றன.
தவிர்க்கும் முறைகள்
மலச்சிக்கலைத் தவிர்க்க, கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. ஆரோக்கியமாக உள்ள ஒருவர் சரியான உணவு முறையைப் பின்பற்றி, தேவையான அளவுக்குத் தண்ணீர் குடித்து, தினமும் உடற்பயிற்சி செய்து, மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்ததும் மலம் கழித்துவிடுகிற பழக்கத்தைப் பின்பற்றினாலே போதும். தினமும் சரியான / முறையான நேரத்தில் மலம் கழிப்பது வழக்கமாகிவிடும். இதன் பலனால், அவருக்கு மலச்சிக்கல் ஏற்படுகிற வாய்ப்பு 90 சதவீதம் குறைந்துவிடும்.
நார்ச்சத்து உதவும்
நாம் சாப்பிடும் உணவு வகைகளில் நார்ச்சத்து நிறைந்த கோதுமை, கேழ்வரகு. தினை, வரகு, கொள்ளு போன்ற முழுத் தானிய உணவு வகைகள் மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும் (தவிடு நீக்கப்பட்ட தானியங்களில் நார்ச்சத்து இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்). வாழைத்தண்டு, காரட், முள்ளங்கி, முட்டைக்கோஸ், பாகற்காய், புடலங்காய், அவரைக்காய், கொத்தவரங்காய் போன்ற காய்கறிகள், பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை, மொச்சை போன்ற பருப்புகள், கீரைகள், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, ஆப்பிள், அத்திப்பழம், பேரீச்சை, மாம்பழம் போன்ற பழங்களில் நார்ச்சத்து அதிகம். இவற்றை தினசரி உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். மிளகு, ஓமம், கொத்துமல்லி, மிளகாய் போன்றவற்றிலும் நார்ச்சத்து அதிகம். இவற்றில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை அதிகப்படுத்தவேண்டும். உதாரணம்: மிளகு ரசம், கொத்துமல்லிச் சட்னி.
தினமும் 3 லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். காபி, தேநீர், மென்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக்கொண்டு, இளநீர், பழச்சாறுகள் குடிப்பதை அதிகப்படுத்த வேண்டும். இனிப்பு வகைகளையும் கொழுப்பு உணவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும். விரைவு உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். இரவில் இரண்டு பழங்களைச் சாப்பிட வேண்டும். வாழைப்பழம்தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. பருவத்துக்குத் தகுந்த எந்தப் பழத்தையும் சாப்பிடலாம்.
தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது மிக அவசியம். இயலாதவர்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம். புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. தேவையில்லாமல் வெயிலில் அலையக் கூடாது. மலம் கழிப்பதற்கு என்று போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டியது மிகவும் முக்கியம். வேலை அவசரம் காரணமாகக் குறைந்த நேரத்தில் மலம் கழிக்கக் கூடாது. மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்துவிட்டால் அதை அடக்காதீர்கள். காலை நேரமானாலும் சரி, மாலை நேரமானாலும் சரி தினமும் ஒரே நேரத்தில் கழிப்பறைக்குச் செல்லும் வழக்கத்தை உண்டாக்கிக்கொண்டால் அடுத்தடுத்த நாட்களிலும் அதே நேரத்தில் மலம் வந்துவிடும்.
Message Moxibustion And Tcm on WhatsApp. https://wa.me/message/Y6EH7QB4UHV2H1
Kindly visit us
www.tamilnadutherapist.in
YouTube
https://youtube.com/channel/UCSdsLmBp5yVeNFAIPijMs1A
Facebook
https://www.facebook.com/Tamilnadu-Therapist-109759151526276/
Instagram https://www.instagram.com/invites/contact/?i=e89769y8bjh&utm_content=n6af6w9